கடலூரில் 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' மினி மாரத்தான் போட்டி 5 கி.மீ. தூரம் மாணவர்களுடன் ஓடிய எஸ்.பி., டி.எஸ்.பி.
கடலூரில் ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாணவர்களுடன் 5 கி.மீ. தூரம் ஓடினார்.;
ஆகஸ்டு 11-ந் தேதி 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியையொட்டி கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், கடலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடினார். கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய போட்டியானது பாரதி சாலை மற்றும் பீச்ரோடு வழியாக சில்வர் பீச் வரை சென்றது. இதில் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் கடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கையெழுத்து இயக்கம்
முன்னதாக மாணவ-மாணவிகள் மற்றும் போலீசார் போதை பொருட்கள் உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், போதைப்பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து கடலூர் பஸ் நிலையத்தில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு
இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போலீசாருடன் சேர்ந்து போதைப்பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.