போதைப்பொருள் ஒழிப்பில் வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
போதைப்பொருள் ஒழிப்பில் வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.
போதைப்பொருள் ஒழிப்பில் வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மற்றும் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவதில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற அனைத்து உயரதிகாரிகளின் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுதும் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டங்களும், ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 எல்லைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள்கள் பயன்பாட்டை தவிர்ப்பதில் வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் ஆகும். போதைப்பொருள்கள் விற்கும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பனை செய்ய மாட்டோம். அவ்வாறு விற்பவர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போம் என்று வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்''் என்றார்.
கூட்டத்தில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பது குறித்தும் அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், பாஸ்கர பாண்டியன், சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் நன்றி கூறினார்.