குமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்

உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு குமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடைபெற்றது.;

Update: 2022-06-26 03:27 GMT

கன்னியாகுமரி,

ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி மத்திய அரசின் திட்டமான போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டம், குமரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம், நியூ பாரத் டிரஸ்ட்,ஏ. எம். கே. ஆகியவை இணைந்து குமரி மாவட்டத்தில் 21 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரையிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் "மாணவரே, வேண்டாமே...போதை!" என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வெளியிட அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

பின்னர் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினார்கள். பின்னர் இந்த ஜோதி ஓட்டத்தை அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஜோதி ஓட்டத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் தொடர் ஓட்ட வீரர்களுடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம்,பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை,சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்