குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு கூலி தொழிலாளி தற்கொலை

மயிலாடுதுறையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-08 18:45 GMT

மயிலாடுதுறையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூலி தொழிலாளி

மயிலாடுதுறை செங்கமேட்டுத் தெரு, சுந்தரராமன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் கார்த்திகேயன் (வயது 34). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கிருத்திகா (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

குழந்தை இல்லை என்ற காரணத்தினால் கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக கோபித்துக் கொண்டு கிருத்திகா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மனைவிக்கு செல்போன் மூலம் பேசிய கார்த்திகேயன் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

தூக்குப்போட்டு கூலி தொழிலாளி தற்கொலை

இதுகுறித்து கிருத்திகா அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அதிகாலை 5 மணி அளவில் கணவன் வீட்டிற்கு கிருத்திகா சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்தாழ்பாள் போடப்பட்டு மூடி இருந்தது. பின்னர் கிருத்திகா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் கார்த்திகேயன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்