பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
இண்டூர் அருகே உள்ள ஏ.செக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை என்கிற சுகுமார் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் தனது மருமகள் ராதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி சுகுமார், தனது மருமகள் ராதாவிடம் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் ராதா மற்றும் அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் ஏ.செக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் முதியவர் ஒருவரின் பிணம் மிதப்பதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கிணற்றில் மூழ்கி சாவு
அதன்பேரில் போலீசார் மற்றும் தர்மபுரி தீயணைப்பு துறையினர் அங்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் பிணமாக மிதந்த முதியவர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் மூழ்கி பலியானவர் தொழிலாளி சுகுமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமார் கிணற்றின் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.