இடைநின்ற மாணவன், மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
கொள்ளிடம் ஒன்றியத்தில் இடைநின்ற மாணவன், மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிவட்டார வள மையத்தின் சார்பில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் வேட்டங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் நீண்ட காலமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வருவது தெரிய வந்தது.உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியை அஞ்சம்மாள், ஆசிரியர்கள் தமிழ்செல்வன், செந்தில் குமார் ஆகியோரின் உதவியுடன் மாணவனின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாடு அரசு கொடுத்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். இதை தொடர்ந்து இடைநின்ற மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். மேலும் மாணவனுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.பின்னர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி கூறுகையில், மாணவர்களை செங்கல் சூளை மற்றும் கடைகளில் பணிக்கு அமர்த்துவது சட்டபடி குற்றமாகும். குழந்தை தொழிலாளர்கள் குறித்து 9788858785 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.இந்த கணக்கெடும் பணியில் வெள்ளகுளம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகரன், ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் ஆகியோர் ஈடுபட்டனர்.