'சீட்' பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 43 பேருக்கு அபராதம்
நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களில் ‘சீட்’ பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 43 பேருக்கு தலா ரூ.1000-ஐ போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களில் 'சீட்' பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 43 பேருக்கு தலா ரூ.1000-ஐ போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்தனர்.
சாலைவிதியை மீறிய...
நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கடந்த ஒரு வாரமாக போலீசாரின் தொடர் கண்காணிப்பால் விதியை மீறும் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 3 டிரைவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோக சாலைவிதியை மீறிய வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 172 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
43 பேருக்கு அபராதம்
மேலும் கடந்த 2 நாட்களாக ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 43 பேருக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.