சேலம் சரகத்தில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய 118 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து-அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் சரகத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 118 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 20:22 GMT

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதுதவிர, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலில் விதிகளை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றி செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுனர் உரிமம் ரத்து

இந்நிலையில், சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 140 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 38 டிரைவர்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 94 டிரைவர்கள், சிக்னல் விதிகளை மீறி இயக்கிய 82 பேர் உள்பட 391 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 118 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், சாலை விதிகளை மீறி செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுனரின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும். அந்த வகையில் கடந்த மாதம் 118 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்