2,180 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து
தேனியில் போக்குவரத்து விதிகளை மீறிய 2,180 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.;
போக்குவரத்து விதிமீறல்
தேனி நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகரில் பல இடங்களில் வாகன தணிக்கை செய்து விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது, செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த பிறகு நிற்காமல் விதிகளை மீறிச் செல்வது போன்ற 6 வகையான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதோடு, அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டதில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான 7 மாத கால கட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 2,180 பேரின் ஓட்டுனர் உரிமம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதில், கடந்த மாதம் மட்டும் 520 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் தேனி போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.