கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த டிரைவர்கள்
கோரிக்கை அட்டை அணிந்து டிரைவர்கள் பணிபுரிந்தனர்.
திருச்சி:
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அந்த சங்கத்தை சேர்ந்த கார் டிரைவர்கள் கோரிக்கை அட்டையை தங்களது சட்டையில் அணிந்தபடி பணி செய்தனர். இதற்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். முபாரக் உசேன் முன்னிலை வகித்தார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓட்டுனர்களின் தரஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் கொண்டுவர வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும். ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.