காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; 13 மாணவர்கள் காயம்
காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். 13 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
கமுதி,
காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். 13 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
ஆட்ேடா கவிழ்ந்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அம்மன்பட்டி, முத்துப்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, இடைச்சியூரணி போன்ற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கமுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். தங்கள் கிராமங்களில் இருந்து பள்ளிக்கு, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அமர்த்தியே சென்றுவருகின்றனர்.
அம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லமருது (வயது 35) என்பவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள சில மாணவ, மாணவிகளை கமுதியில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று வந்தார்.
நேற்று காலை 8 மணி அளவில், 13 மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கமுதி நோக்கி சென்றார். இடைச்சியூரணி அருகே சென்றபோது, காட்டுப்பன்றி ஒன்று ஆட்டோவின் குறுக்கே திடீரென பாய்ந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டிரைவர் சாவு
இதில் டிரைவர் நல்லமருது படுகாயம் அடைந்தார். மாணவ, மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள், அனைவரையும் மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லமருது உயிரிழந்தார். மாணவர் யுவராஜ்பாண்டியன், மாணவிகள் வந்தனாஸ்ரீ, வர்ஷா தேவி, புவனா, அங்காளஈஸ்வரி, பானுப்பிரியா, மதுமிதா ஆகிய 7 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 6 பேர் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன், கமுதி இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் பிரகாஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மாணவ, மாணவிகளை காண அவர்களது பெற்றோர், உறவினர்கள் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.