தெங்கம்புதூர் அருகேகுளத்தில் மூழ்கி டிரைவர் சாவு

தெங்கம்புதூர் அருகேகுளத்தில் மூழ்கி டிரைவர் இறந்தார்.

Update: 2022-12-13 21:26 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31), டிரைவர். திருமணம் ஆகாதவர். இவர் நேற்று முன்தினம் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பனங்கொட்டான்விளையை சேர்ந்த நண்பர் ரமேஷ் (36) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்ததாகவும், அதை அவருடைய அண்ணன் கணேஷ் தெங்கம்புதூரில் வைத்துப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை வரை சுரேஷ் வீட்டுக்கு வராததால் அவருடைய நண்பர் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் தெங்கம்புதூர் அருகே உள்ள சிங்களேயர்புரி பால்குளம் படித்துறையில் மது அருந்தியதாக ரமேஷ் தெரிவித்தார்.

இது குறித்து கணேஷ் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வேட்டி மற்றும் செருப்பு படித்துறை அருகில் கிடந்தது. இதனால் சுரேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதிய போலீசார் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் ஒரு மணி நேரம் தேடி சுரேஷை பிணமாக மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்