கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-10-18 12:16 GMT

சென்னை,

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடியதால் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில்,சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் கவர்னர் பதவியை வகிக்கவே தகுதியற்றவர் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர்!

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை மத்திய  அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்