ஸ்ரீரங்கத்தில் தாய், மகனை கொன்று டிரைவர் தற்கொலை செய்த சம்பவம்: மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழவிடுங்கள் உருக்கமான கடிதம் சிக்கியது
ஸ்ரீரங்கத்தில் தாய், மகனை கொன்று டிரைவர் தற்கொலை செய்த சம்பவத்தில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் தாய், மகனை கொன்று டிரைவர் தற்கொலை செய்த சம்பவத்தில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் டிரைவர்
திருச்சி திருவானைக்காவல் அகிலாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். கார்த்திகேயனின் தாய் வசந்தா (63).
இவர்கள் அனைவரும் அகிலா நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார் டிரைவர் வேலைக்காக கார்த்திகேயன் துபாய்க்கு சென்றார். வசந்தபிரியா ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து திடீரென திருச்சிக்கு வந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தாயும், மகனும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர். மாலையில் வேலை முடிந்து வந்த வசந்தபிரியா, நீண்ட நேரம் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியவர்களின் உடலை கீழே இறக்கினார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம்
பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்துச்செல்வதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தற்போது கடிதத்தின் முழு விவரம் வெளியாகி உள்ளது. அதில் மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள். எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். அதனால் எனது தாயும், எனது மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்று கார்த்திகேயன் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது.
கருத்து வேறுபாடு
இதைத்தொடர்ந்து கார்த்திகேயனின் மனைவி மற்றும் உறவினர்களிடமும், அக்கம், பக்கத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார்த்திகேயன் தனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்ததும், வெளிநாட்டில் இருந்து கொண்டே தனது செல்போன் மூலம் அந்த கேமராக்கள் வழியாக இங்கு நடப்பவற்றை பார்த்து வந்ததும், 3 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், வௌிநாட்டில் இருந்து கார்த்திகேயன் புறப்பட்டு திடீரென திருச்சிக்கு வந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த காா்த்திகேயன் தாயையும், மகனையும் கொன்று தற்கொலை செய்து உள்ளதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
அத்துடன், கார்த்திகேயனின் தாய் வசந்தா பீரோவின் கைப்பிடியிலும், மகன் சாமிநாதன் கதவின் கைப்பிடியிலும் தூக்கில் தொங்கியதை வைத்து பார்க்கும் போது, கார்த்திகேயன் 2 பேரையும் கொன்று தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், இதுபற்றி உறுதியாக தெரியவரும். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.