காரில் கஞ்சா கடத்திய டிரைவர் கைது

காரில் கஞ்சா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா, லாட்டரி விற்ற 4 பேர் சிக்கினர்.

Update: 2023-07-19 18:45 GMT

ஓசூர்

கஞ்சா கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் போலீசார் கக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1½ கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள ராமகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டா (வயது 25) என்பதும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

ஓசூர் எலசகிரி பகுதியில் மளிகை, பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். அதில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சத்யஜித் ராய் (32), கிருஷ்ணப்பள்ளி கோவிந்தசாமி (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம் போலீசார் கொசமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சந்தபாளையத்தைச் சேர்ந்த காவேரி (45) என்பவரை கைது செய்தனர். அதே போல தேன்கனிக்கோட்டை போலீசார் ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற தேன்கனிக்கோட்டை மேல் வீதியை சேர்ந்த முபாரக் (22) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்