வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்- செல்போன் பறித்த டிரைவர் கைது
வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்- செல்போன் பறித்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தாந்தோணிமலையை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 31). இவர் கரூரில் இரு சக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சேலத்தில் இருந்து பஸ் மூலம் கரூர் வந்த அரவிந்த் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே இறங்கினார். அப்போது, கரூர் சிவானந்தம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (26) என்பவர் தனது ஆட்டோவில், அரவிந்தை ஏற்றி கொண்டு சிறிது தூரம் சென்றார். பின்னர் ஆட்டோவை நிறுத்தி அரவிந்தை, மணிகண்டன் தகாத வார்த்தையால் திட்டியும், கத்தியை காட்டி மிரட்டியும் அவர் வைத்திருந்த ரூ.ஆயிரம் மற்றும் செல்போனை பறித்தார். இதுகுறித்து அரவிந்த் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.