குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா?
திருமருகல் அருகே குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருமருகல் அருகே குடிநீர் வீணாவது தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வீணாகும் குடிநீர்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலமாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பனங்குடி பிராவடையான் ஆற்றின் பாலத்தில் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி ஆற்றில் கலந்து வீணாகிறது.
குழாயில் உடைப்பு
இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது. குடிநீர் வீணாவதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:- சமூகவிரோதிகள் சிலர் இரவு நேரங்களில் குடிநீர் குழாயை தொடர்ந்து உடைத்து வருகிறார். இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். எனவே குழாயை உடைக்கும் சமூக விரோதிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் - நன்னிலம் மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.