4 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வினியோகம்

வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2022-12-15 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கடல்நீர் புகுந்தது

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது வானவன்மகாதேவி மீனவர் காலனிக்குள் கடல்நீர் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குடிநீர் உப்பு நீராக மாறியது.அந்த பகுதியில் வசித்து வரும் 240 குடும்பத்தினர் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர்.

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் 3 கி.மீ தூரம் தூரம் நடந்து சென்று மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் எடுத்து வந்தனர். தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என வானவன்மகாதேவி மீனவர் காலனி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

குழாய் அமைக்கும் பணி

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு 15-வது நிதிக்குழு மானியம் நிதியில் இருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வானவன்மகாதேவி மீனவர் காலனிக்கு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மீனவ ஊர்பஞ்சாயத்து முன்னிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

பட்டாசு வெடித்து...

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றிவேல், வார்டு உறுப்பினர் பவானி, ஊராட்சி செயலர் மதன்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

4 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் குடிநீர் குழாய்க்கு மாலை அணிவித்து பூஜை செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்