ரூ.31.82 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

பர்கூர் ஒன்றியத்தில் ரூ.31 கோடியே 82 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2022-11-22 18:45 GMT

பர்கூர் ஒன்றியத்தில் ரூ.31 கோடியே 82 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கூட்டு குடிநீர் திட்டம்

பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகள், சிகரலப்பள்ளி மற்றும் 143 இதர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 36,176 பேர் பயன்பெறும் வகையில் ரூ.31.82 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்க விழா நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டுவன், மேற்பார்வை பொறியாளர்கள் ராஜசேகர், சங்கரன், நிர்வாக பொறியாளர் சேகர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

நீர் உறிஞ்சு கிணறுகள்

பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகள், சிகரலப்பள்ளி மற்றும் 143 இதர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 36,176 பேர் பயன் பெறும் வகையில் ரூ.31.82 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்திற்கு, நபார்டு வங்கியின் கடனுதவி 82 சதவீதமும், குறைந்தபட்ச தேவை திட்டத்தின் மூலமாக 15 சதவீதம் நிறைவேற்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், பென்னேஸ்வரம் மடம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் 3 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் தலைமையிடத்தில் உள்ள 0.85 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்சேகரிப்பு தொட்டிக்கு குடிநீர் உந்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

இங்கிருந்து தொகரப்பள்ளி, பெருகோபனப்பள்ளி, குட்டூர், பண்டசீமனூர், சிகரலப்பள்ளி, மல்லபாடி, ஒப்பதவாடி ஆகிய 8 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரைமட்டம் நீர் சேகரிப்பு தொட்டிகளுக்கும், பட்லப்பள்ளி, கணமூர் கொல்லக்கொட்டாய் 2 நீர் உந்து நிலையத்திற்கும், நீர் உந்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 192 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரேற்று குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

சீராக குடிநீர் வினியோகம்

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, முதல்-அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இதேபோல, ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்பில் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வெலகலஅள்ளி மற்றும் 39 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே சீராக குடிநீர் வழங்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்