ஒகேனக்கல் குடிநீர் திட்ட பகுதி-2 பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் பகுதி 2- பணிகள் ரூ.4500 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று ஆடிப்பெருக்கு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2022-08-02 17:24 GMT

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் பகுதி 2- பணிகள் ரூ.4500 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று ஆடிப்பெருக்கு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆடிப்பெருக்கு விழா

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சித்ரா விஜயன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் வாழ்த்தி பேசினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பல்துறை பணி விளக்க கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து 4,522 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலன்கள் பாதுகாக்கப்படும்

அப்போது அமைச்சர் பேசுகையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் கூடுதல் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4,500 கோடி மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒட்டனூர்-கோட்டையூர் இடையே ரூ.250 கோடி செலவில் பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும். ஒகேனக்கல்லை வாழ்வாதாரமாக கொண்ட அனைத்து தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ஹேமநாதன், ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் வீரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரவிச்சந்திரன், தாசில்தார் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ், கூத்தப்பாடி ஊராட்சி தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலா அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்