2022-23-ம் ஆண்டில் 36 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் 36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள், சமூக பங்களிப்பு பங்கு தொகையை செலுத்த கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2022-10-14 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு முதல் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செயல்படக்கூடிய குடிநீர் இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

நிலைத்த குடிநீர் வினியோக முறையை உருவாக்கிட நீராதாரங்கள் உருவாக்குதல், குடிநீர் வினியோகம் செய்திட குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், குடிநீர் தரப்பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல், பழுதுபார்ப்பு பணிகளில் உள்ளூர் மக்களை திறன்மேம்பாடு அடையச்செய்தல், குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல், தொடர் செயல்பாடுகள் இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு குக்கிராமத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

குடிநீர் வினியோகத்தில் குடிமக்கள் ஒவ்வொருவரின் பங்கை உருவாக்கிடவும் அதனை தங்கள் சொந்த சொத்தாக உணரவும், பொதுமக்களிடமிருந்து திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்ட குறைந்த சதவீதம் சமூக பங்களிப்பு தொகையாக பெற்று பொதுமக்களையும் திட்ட செயல்பாட்டில் ஈடுபடுத்தி இத்திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்களில் பணி மதிப்பீட்டில் 5 சதவீத சமூக பங்களிப்பு தொகையும், இதர கிராமங்களில் 10 சதவீத சமூக பங்களிப்பு தொகையும் வசூல் செய்திட திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் 10 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 84 ஊராட்சிகளில் மொத்தம் 36,234 செயல்படக்கூடிய வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை ரூ.30.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி. மேற்படி ஊராட்சிகளில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்களில் பொது மக்கள், ரூ.36.81 லட்சமும், இதர பகுதிகளில் பொதுமக்கள் ரூ.228.71 லட்சமும் சமூக பங்களிப்பு தொகையினை வழங்கி இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

சமூக பங்களிப்பு தொகை

சமூக பங்களிப்பு தொகை வசூல் செய்திட பொதுமக்களை அணுகும் ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி சமூக பங்களிப்பு தொகையினை காலதாமதமின்றி உடனே சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் செலுத்த வேண்டும். எனவே அனைவரும் சமூக பங்களிப்பு தொகை வழங்கி இத்திட்டத்தில் பங்குபெற்று வீடுதோறும் குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என ஊரக பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்