5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நெல்லை மாநகரில் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டல பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பெயரில் தீவிர வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்து வரி குடிநீர் கட்டணம் செலுத்தாத தச்சநல்லூர் மண்டலம் 28-வது வார்டில் 4 குடியிருப்பு பகுதிகளிலும், மேலப்பாளையம் மண்டலம் 48-வது வார்டில் ஒரு குடியிருப்பு பகுதியிலும் என மொத்தம் 5 வீடுகளிலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை மண்டலத்தில் சொத்து வரி குடிநீர் கட்டணம் செலுத்தாத வணிக கட்டிடங்களின் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.
மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, உதவி வருவாய் அலுவலர் முருகன், வருவாய் உதவியாளர்கள் ராமச்சந்திரன், வேலுச்சாமி, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வாசுதேவன், உதவி வருவாய் அலுவலர் அந்தோணி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.