பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-01-18 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சுகாதார சீர்கேடு

கேரளா மாநிலம் பாலக்காடு ரெயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக தினமும் திருச்செந்தூர், திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, நெல்லை, மதுரை, பழனி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

ரெயில் பயணிகளுக்கு வசதியாக நடைமேடை பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீரின் நிறம் மாறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

சுகாதார பணிகள் நிறுத்தி வைப்பு

பொள்ளாச்சி ரெயில் நிலையம் பாலக்காடு கோட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளது. குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் அதை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ரெயில் நிலையத்தில் தற்போது சுகாதார பணிகள் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் நிதி பற்றாக்குறை என்று பதில் அளிப்பதாக கூறுகின்றனர். இதே பாலக்காடு ரெயில் நிலையத்தில் இதுபோன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொள்ளாச்சியை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இல்லையெனில் கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்