அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-04-27 18:45 GMT

நாகர்கோவில், 

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்புடன் செல்ல வேண்டும்

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைவானால் பல விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரித்திட உடலில் நீர் இழப்பிற்கு ஏற்ப அதிகளவு குடிநீர், ஓ.ஆர்.எஸ். (ஓரல் ரீஹைட்ரேசன் சொலூசன்) எலுமிச்சை சாறு, இளநீர், மோர், லஸ்ஸி, பழச்சாறுகள் தொடர்ந்து பருக வேண்டும்.

தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்ற பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் முடிந்தவரை வெளியே செல்லாமல் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது காலணி மற்றும் கண்ணாடி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்

வெயில் நேரங்களில் வாகனங்களில் குழந்தைகளை தனியே விட்டு, விட்டு வெளியே செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்த்துக் கொள்ள வேண்டும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணர்ந்தால் வெப்பத்தை தணிக்க ஈரமான துணியால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். போதிய இடைவெளி விட்டு நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளை நிழல்தரும் கூரையின் அடியில் கட்டி பராமரிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடை தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.

மின்கம்பிகள் உருக வாய்ப்பு

அதிக வெப்பத்தின் காரணமாக கூரை வீடுகளில் உள்ள மின்கம்பிகள் உருகி குறுக்கு சுற்று ஏற்பட்டு வீட்டின் கூரைகளில் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. விறகு, பனை ஓலை ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் போது கோடை வெப்பத்தின் காரணமாக நெருப்பானது மற்ற இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே இவற்றை பயன்படுத்திய பிறகு முற்றிலுமாக தண்ணீர் விட்டு அணைத்து விட வேண்டும். கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏதேனும் மருத்துவ ஆலோசனைகள் தேவை என்றால் 104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்