சொந்த வீடு கனவை காசாக்கும் யுக்தி...

சொந்த வீடு கனவை காசாக்கும் யுக்தி...

Update: 2023-05-26 10:33 GMT

போடிப்பட்டி

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன் வாழ்நாளில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற கனவு இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே போய் விடுகிறது. ஆனால் ஒருசிலர் தங்கள் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக முட்டி மோதி போராடுகிறார்கள்.

வாடகை வீடு

அதுபோன்ற நடுத்தர, நம்பிக்கை மனிதர்களை இலக்காகக் கொண்டு ஏமாற்றும் வகையில் ஒருசில வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சுவத்திலே ஆணி அடிக்காதீங்க. தண்ணியை கண்டபடி செலவு பண்ணாதீங்க. இரவு நீண்ட நேரம் விளக்கு எரியக் கூடாது. 10 மணிக்கு மேலே வீட்டுக்கு வரக்கூடாது. துணிய அங்க காயப்போடக்கூடாது. இங்க க ாயப்போடக்கூடாது. இது என்ன மோட்டர்சைக்கிளை சுவர் ஓரமா நிறுத்தி இருக்கிறீங்க. சுவரில் பெயிண்ட் ேபான எவ்வளவு செலவு ஆகும்ன்னு தெரியுமா? என ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்குத் தான் சொந்த வீட்டின் அருமை தெரியும்.

பல வாடகை வீடுகளில் குழந்தைகளை சுதந்திரமாக விளையாடக் கூட உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை என்பது கொடுமையான விஷயமாகும். தன் வாழ்நாளில் வாடகையாகக் கொடுத்த காசை சேர்த்து வைத்திருந்தால் சொந்த வீடு வாங்கியிருக்கலாம் என்று பல நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர் புலம்புவதை கேட்டிருக்கலாம். இந்த சூழ்நிலையில் வசிப்பவர்கள் கடன் வாங்கியாவது சொந்த வீட்டுக்கு குடி போய் விட வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். அதுபோன்ற ஒருவரின் அனுபவம் தான் இது.சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்த அவர், வீட்டுக்கடனுக்காக வங்கிகள், தனியார் வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அலைக்கழிக்கப்படுகிறார். தனது சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ? என்று மனம் சோர்ந்து போய் இருக்கும் போது வந்த தொலைபேசி அழைப்பு உற்சாகம் தருகிறது.

வெளி மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் வீட்டுக்கடன் நிறுவனத்திலிருந்து பேசியவர் தங்களுக்கு வீட்டுக்கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், தங்கள் அலுவலகத்துக்கு ஆவணங்களுடன் நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.

பரிசீலனைக் கட்டணம்

மிகவும் மகிழ்ச்சியுடன் நிலப் பத்திரம், ஆதார், ரேஷன் அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்த அலுவலகத்துக்கு செல்கிறார்.வீடு கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் கடன் தேவை என்பதை தெளிவாக தெரிவிக்கிறார். அவரிடம் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் பெற்றுக் கொண்டு பரிசீலனைக் கட்டணம் என்ற பெயரில் ரூ. 6 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் நம்பிக்கையுடன் வீடு கட்டும் பணிகளைத் தொடங்குகிறார். ஆனால் ஒருசில வார இழுத்தடிப்புக்குப் பிறகு உங்க அப்ளிக்கேஷன் ஹெட் ஆபீஸ்ல ரிஜெக்ட் ஆயிடுச்சி என்று கூலாக பதில் சொல்கின்றனர்.

இதே நிறுவனத்தினர் இது போன்று பலரிடம் பரிசீலனைக் கட்டணம் பெற்றுக் கொண்டு கடன் வழங்க மறுத்துள்ளது தெரிய வந்துள்ளது.வீட்டுக்கடனுக்காக நாம் அலையும் விஷயம் மற்றும் நமது தொலைபேசி எண்கள் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.இதுபோன்ற நிறுவனங்கள் நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை காசாக்கும் யுக்தியுடன் களமிறங்கியுள்ளதாகவே தெரிகிறது.தொகை சிறியதாக இருப்பதாலும், பரிசீலனைக் கட்டணம் என்ற பெயரில் பெறப்படுவதாலும் இதுகுறித்து புகார் தெரிவிக்க யாரும் முன்வருவதில்லை.

கஷ்டம்ங்க

எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா என்ற புலம்பலுடன் கடந்து செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரிவதில்லை.எனவே வீட்டுக்கடன் வாங்க விரும்புபவர்கள் வங்கிகள் அல்லது நம்பிக்கையான நிறுவனங்களை அணுக வேண்டியது அவசியமாகும்.கடன் கொடுக்காமல், இதுபோல ஏமாற்றுவது ஒரு ரகம் என்றால் கடன் கொடுத்து விட்டு, பல வழிகளில் காசைப் பிடுங்குவது இன்னொரு ரகம்.எனவே சொந்த வீடு கட்டறது மட்டும் முக்கியமில்லைங்க.அதிலே நிம்மதியா வாழறது ரொம்ப...ரொம்ப முக்கியம்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்