மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள்
தேனி அல்லிநகரத்தில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவில் நூலகப் போட்டிகள் இன்று நடந்தன. நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் வாசித்து அதன் மையக் கருத்துகளை கொண்டு ஓவியம் வரைதல், கதை கூறுதல், கட்டுரை எழுதுதல், திறனாய்வு செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களிலும் இந்த போட்டிகள் நடந்தன. தேனி வட்டார அளவிலான போட்டிகள், அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த புத்தகங்களின் கருத்துகளை மையப்படுத்தி ஓவியங்கள் வரைந்தனர். புத்தகத்தில் இடம் பெற்ற தலைவர்கள் மற்றும் சில காட்சிகளை கற்பனை திறனோடு மாணவ-மாணவிகள் ஓவியமாக வரைந்தனர்.
மேலும், கட்டுரை எழுதுதல், திறனாய்வு செய்தல், கதை கூறுதல் போன்ற போட்டிகளிலும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளை பள்ளி ஆசிரியர்கள் செந்தில்குமார், ராஜசேகர் ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்திராணி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.