திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை- பணம் கொள்ளை

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-03 18:45 GMT

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் 475 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் தற்போது பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 59) என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அன்றாட பூஜை செய்வதற்காக அவர் கோவிலுக்கு வந்தார்.

அப்போது கோவில் கதவை திறந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் பிரகாரத்தில் இருந்த இரும்பு உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 உண்டியல்களில் பூட்டுகள் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணம், நகைகள் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிந்தது.

வலைவீச்சு

விசாரணையில், நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலின் பின்புறமுள்ள மதில் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த நகைகள், காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை பணம் சுமார் ரூ.15 ஆயிரமும் மற்றும் சிறு, சிறு நகைகளும் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்