தூர்ந்துபோன நீர்வரத்து வாய்க்கால்கள்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தூர்ந்துபோன நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இதற்காகத்தான் ஊருக்கு ஊர் குளம், ஏரிகள் வெட்டியும், அணைகள் அமைத்தும் மனிதன் தண்ணீரை சேமித்து வைத்தான். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூரில் 119 அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் இந்த அணையில் தண்ணீரை சேமித்து வைத்து தேவைக்கு ஏற்ப அதில் இருந்து அவ்வபோது பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
வலதுபுற வாய்க்கால்
அணை திறக்கப்படும்போது இடது மற்றும் வலதுபுற வாய்க்கால்கள் என 2 பிரதான வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதில் இடதுபுற வாய்க்கால் வழியாக பாய்ந்தோடும் தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டபகுதிகளுக்கு செல்கிறது. வலது புற வாய்க்கால் வழியாக வெளியேறும் தண்ணீர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் வழியாக 47 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. வலதுபுற பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் வழியாக பாய்ந்தோடும் தண்ணீர் தான் கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை நிரப்பி, பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையாக இருக்கும் மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, மங்களம், சவேரியார்பாளையம், மேல் சிறுவள்ளூர், கடுவனூர், சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், ஜம்பை, வடமாமந்தூர், குளத்தூர், அரும்பராம்பட்டு உள்ளிட்ட 48 ஏரிகளையும் இந்த தண்ணீர் நிரப்புகிறது. இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலு்ம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதால் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு
ஆனால் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர் கடைமடையை சென்றடைகிறதா? என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. காரணம் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்கால்களில் பக்கவாட்டு சுவர்கள் ஆங்காங்கே உடைந்து சேதம் அடைந்து கிடக்கிறது. மேலும் சில இடங்களில் வாய்க்கால்கள் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக வெளியேறி வீணாக வழிந்தோடுகிறது. இதனால் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து காணப்படுவதில்லை.
மேலும் வாய்க்காலின் கரையோரம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இது கிளை வாய்க்காலுக்குள் செல்லும்போது அடைப்பை ஏற்படுத்தி தண்ணீர் செல்ல தடையை எற்படுத்தி வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க அடுத்து பிரதான வாய்க்காலில் இருந்து 10-க்கும் மேற்பட்டகிளை வாய்கால்கள் பிரிந்து செல்கின்றன. ஒவ்வொரு வாய்க்கால்களும் 10 முதல் 12 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது. ஆனால் நடிகர் வடிவேல் ஒரு சினிமா படத்தில் எங்க ஊரு கிணற்றை காணோம் என்று கூறியதுபோல் இந்த கிளைவாய்கால்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
சில வாய்க்கால்கள் இது நிலமா? அல்லது வாய்க்காலா? என்று ஆச்சரியப்படும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் வாய்க்கால்கள் மண்மேடுகளுடனும், பாறைகள் சரிந்து கிடப்பதையும் காணமுடிகிறது. வாய்க்கால்கள் தூர்ந்து கிடப்பதால் அந்த பகுதியில் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே இருக்கும் இடம் தெரியாமல் தூர்ந்துபோய் கிடக்கும் நீர் வரத்து வாய்க்கால்களை கண்டுபிடித்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விவசாய பணிகள் பாதிப்பு
இது குறித்து பொரசப்பட்டு பிச்சைக்காரன் கூறியதாவது:-
சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எங்கள் பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருவது சாத்தனூர் அணை மட்டுமே. அப்பகுதியில் இருந்துவரும் வாய்க்கால் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் வாய்க்கால்கள் ஆங்காங்கே தூர்ந்து கிடப்பதால் தண்ணீர் சரியான முறையில் ஏரியை சென்றடைவது கிடையாது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லை
வட மாமந்தூர் பகுதியை சேர்ந்த ராமதாஸ்:-
எங்கள் விவசாய நிலம் வாய்க்காலின் அருகில் தான் உள்ளது. வாய்க்கால் முழுவதும் தூர்ந்து கிடப்பதால் அதில் வரும் தண்ணீர் விவசாய நிலம் வழியாக பாய்ந்தோடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் மட்டுமின்றி விவசாயிகளாகிய நாங்களும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. எனவே நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து தண்ணீர் வீணாக வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தூர்வாரிய பிறகு திறக்க வேண்டும்
ஜம்படை பகுதியை சேர்ந்த ரங்கநாதன்:-
தற்போது 2 ஆண்டுகளாக மழை பெய்ததையடுத்து தண்ணீருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் தண்ணீர் பிரச்சினை உள்ள காலங்களில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர்தான் எங்களுடைய சாகுபடிக்கு கை கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரிய பிறகு தான் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் வாய்க்கால்கள் தூர்ந்தும், புதர் மண்டியும், மண்மேடுகளாவும் இருக்கும் நிலையில் தண்ணீர் திறந்து விடும்போது அது வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக வெளியேறி வீணாக வழிந்தோடுகிறது.
எனவே எதிர்வரும் காலங்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பிரதான வாய்க்கால் முதல் கிளை வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்த பிறகே தண்ணீர் திறந்து விட வேண்டும்.