டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை பெற்றவர்களின் மேல் முறையீடு மீது அடுத்த மாதம் இறுதி விசாரணை

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 17-ந் தேதி இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

Update: 2022-09-14 23:00 GMT

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நிலம் பிரச்சினை தொடர்பாக பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையாவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி உள்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, பொன்னுசாமி, அவரின் மகன்களான வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது.

அவகாசம்

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 7 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி ஐகோர்ட்டுக்கு வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் கீழ்கோர்ட்டு அனுப்பிவைத்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அதாவது டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட நாளில் (செப்டம்பர் 14-ந் தேதி) விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் பாட்னா ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியும், மூத்த வக்கீலுமான அஞ்சனா பிரகாஷ் ஆஜராகி, இந்த வழக்கில் என்னை தற்போதுதான் நியமித்துள்ளனர். எனவே, வழக்கு ஆவணங்களை படிக்க வேண்டும். அதற்கு அவகாசம் வழங்கும்விதமாக இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார்.

திட்டவட்டம்

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், எத்தனை முறைதான் விசாரணையை தள்ளிவைக்க முடியும்? ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வரும்போது டெல்லி, மும்பை, கவுகாத்தியில் இருந்து வக்கீல்கள் வருகிறார்கள். அதற்காக விசாரணையை தள்ளிவைக்க முடியுமா? இவ்வாறு தொடர்ந்து தள்ளிவைத்தால், பாதிக்கப்பட்டவருக்கு யார் பதில் சொல்வது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்த நீதிபதிகள், அப்போது எந்தக் காரணத்தை கொண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்