இரட்டை ரெயில்பாதை பணிகள்: மதுரை வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் 3 நாட்கள் மாற்றம்
ரெயில்வே பாதை இணைப்பு, தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று முதல் 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.;
மதுரை,
மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதையொட்டி இன்று (6-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று மட்டும் திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் நாளை ( 7-ந் தேதி) கூடல் நகர் வரை மட்டும் செல்லும். மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 6,7,8-ந் தேதிகளில் கூடல் நகரில் இருந்து இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மதுரை-செங்கோட்டை முன்பதிவற்ற பயணிகள் ரெயில், இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் செல்லும்.
விழுப்புரம்-மதுரை ரெயில் இரு மாருகங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் செல்லும். மதுரை-கோவை ரெயில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.
புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் 7-ந் தேதி நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் 8-ந் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் நாளை (7-ந் தேதி) விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும். ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று (6-ந் தேதி) மற்றும் 8-ந் தேதி மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும்.
தேனியில் இருந்து மதுரை வரும் பயணிகள் சிறப்பு ரெயில், 30 நிமிடம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு வரும். திருச்சி பயணிகள் ரெயில், 30 நிமிடம் தாமதமாக மானாமதுரைக்கு வரும்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.