காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு திருவிழா

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2023-09-16 07:40 GMT

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையையொட்டி இரட்டை புறப்பாடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை அரக்கு கரை வெண் நிற பட்டு உடுத்தி மல்லிகை பூ, ஜாதி மல்லி பூ, கொடி சம்பங்கி, உள்ளிட்ட பல்வேறு பூக்களால் ஆன மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு திருவடி கோவிலுக்கு எழுந்தருளினார்.

பின்னர் பச்சை நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பெருந்தேவி தாயாருடன் இணைந்து வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உலா வந்தார்.

கோவில் வளாகத்திற்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு கும்ப ஆரத்தி எடுத்து அத்திகிரி மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெருந்தேவி தாயார் சன்னதிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு ஊஞ்சல் உற்சவம் கண்டு அருளினார்.

இரட்டை புறப்பாடு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்