பயனாளிகளின் விவரங்களை சரிபார்க்க வீடு, வீடாக கள ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் விவரங்களை சரிபார்க்க வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-08-21 20:45 GMT

பொள்ளாச்சி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் விவரங்களை சரிபார்க்க வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடு, வீடாக கள ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முதற்கட்டமாக ஊராட்சிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2-ம் கட்டமாக நகர்புறங்கள், பேரூராட்சிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தொடர்ந்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் விடுபட்ட பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில் பயனாளிகள் கொடுத்த விவரங்களை சரிபார்க்க வீடு, வீடாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை தாசில்தார் ஜெயசித்ரா தொடங்கி வைத்தார். இதில் துணை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி தாலுகாவில் 153 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 99 ஆயிரத்து 974 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். விண்ணப்பங்களை கொடுத்த பயனாளிகளின் விவரங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் சந்தேகம் உள்ள பயனாளிகளின் விவரங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு ரேஷன் கடைக்கு ஒரு நபர் வீதம் 153 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்வார்கள். அப்போது ஏற்கனவே கொடுத்த விவரங்களும், கள ஆய்வு செய்யும்போது உள்ள விவரங்களும் சரியானதா? என்று ஆய்வு செய்யப்படும். மேலும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். அரசிடம் இருந்து கள ஆய்வு செய்ய வேண்டிய பயனாளிகளின் விவரங்கள் வந்ததும், ஆய்வு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்