பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காகவீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1.12.2022-ல் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் ரூ.1000 ரொக்கப் பணம் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் 1.12.2022 அன்றைய தேதியின் படி நடைமுறையில் உள்ள 7 லட்சத்து 73 ஆயிரத்து 601 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 426 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேருக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
டோக்கன் வினியோகம்
மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் சிரமமின்றி பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில் 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வீடு, வீடாக சென்று ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வினியோகம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க 100 பேர் வீதம் ரேஷன் கடைகளுக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் ரேஷன் கடையில் வேணுகோபாலபுரம் தெரு, மிஷன் தெரு, மேற்கு வேணுகோபாலபுரம், கருமாரப்பேட்டை, சுதர்சனம் தெரு, அப்துல்காதர் தெரு ஆகிய பகுதிகளில் விற்பனையாளர் ஜூலியட் மேரி வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினார். இதேபோல் புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர்.