வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
குமரியில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு தகுதியான நபர்களை கண்டறிய நாளை மறுநாள் முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 1.85 லட்சம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு தகுதியான நபர்களை கண்டறிய நாளை மறுநாள் முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 1.85 லட்சம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளது.
மகளிர் உரிமை தொகை
தமிழகத்தில் தி.மு.க. தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக தகுதியான நபர்களை மட்டுமே மகளிர் உரிமை தொகை சென்று சேர வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. குறிப்பாக மாவட்டம் தோறும் முகாம் நடத்தி தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த 2 கட்டமாக முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முகாம்கள் முதற்கட்டமாக 24-ந் தேதி முதல் 4-8-2023 வரையும், 2-ம் கட்டமாக 5-8-2023 முதல் 16-8-2023 வரையும் நடக்கிறது. முகாம் நடைபெறும் விவரங்கள் அந்தந்த ரேஷன் கடையில் உள்ள தகவல் பலகையில் எழுதப்பட்டு இருக்கும்.
விண்ணப்பங்கள் வந்தன
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை கண்டறியும் வகையில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தன. சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த விண்ணப்பங்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் முகாமில் பங்கேற்க வேண்டிய தேதி மற்றும் நேரம் அடங்கிய டோக்கன் ஆகியவற்றை வழங்க உள்ளனர். பொதுமக்கள் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்து தகவல் தெரிந்துகொள்ள மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04652-231077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.