பங்குத்தந்தை அறையில் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

நாங்குநேரி அருகே பட்டப்பகலில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அறையில் கதவை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-02-19 21:13 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே பட்டப்பகலில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அறையில் கதவை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பங்குத்தந்தை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மெயின் ரோட்டில் உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை டென்சில்ராஜா (58) தங்குவதற்கான அறையும் உள்ளது.

கடந்த வாரம் நாங்குநேரி அருகே முத்தலாபுரம் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடந்தது. இதற்கான கணக்குகளை முடித்து விட்டு, மீதமிருந்த சுமார் ரூ.1 லட்சத்தை பங்குத்தந்தை தனது அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

கதவை உடைத்து...

இந்த நிலையில் நேற்று காலையில் டென்சில் ராஜா மதுரைக்கு சென்றார். பின்னர் மாலையில் பங்குத்தந்தையின் உதவியாளரான நாங்குநேரி கண்ணன் தெருவைச் சேர்ந்த அந்தோணி (60) ஆலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தையின் அறைக்கு சென்றார்.

அப்போது அந்த அறையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பங்குத்தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

நகை-பணம் கொள்ளை

உடனே பங்குத்தந்தை டென்சில் ராஜா வந்து தனது அறையில் பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மற்றும் 2 பவுன் தங்க மோதிரம், தங்க டாலர், டென்சில்ராஜாவின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பத்திரம் போன்றவை கொள்ளை போனது தெரிய வந்தது.

பங்குத்தந்தை இல்லாத நேரத்தில் பட்டப்பகலில் அவரது அறையின் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்