கடன் 'ஆப்'களை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம்

கடன் ‘ஆப்'களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-07 18:14 GMT

பணம் கேட்டு மிரட்டல்

வேலூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலிகள் (மொபைல் ஆப்) மூலம் கடன் தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்குவது அபாயகரமானது. ஆன்லைனில் கடன் தருவதாக கூறி செல்போனிற்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி, லிங்க் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் போன்றவற்றை நம்பி கடன் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

கடன் ஆப்பை பதிவிறக்கம் செய்யும் போது செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அவர்கள் பார்க்க முடியும். கடன் கொடுக்கும் போது குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக சொல்லி பணத்தை பெற்றபின் அதிக வட்டி கேட்பார்கள். பணம் தர மறுத்தால் செல்போனில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் அவமரியாதையான குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டுவார்கள்.

தற்கொலை முயற்சி

செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து நிர்வாணமாக சித்தரித்து சம்பந்தபட்ட நபருக்கும், செல்போனில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் ஆபாசமான புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள்.

கடன் ஆப்பை பதிவிறக்கம் செய்தாலே போதும், நீங்கன் கடன் கேட்காமலேயே பணத்தை அனுப்பிவிட்டு அதிக பணம் கேட்டு மிரட்டுவார்கள். பணத்தை செலுத்திய பிறகும் கூட மேலும் பணம் கேட்டு மிரட்டுவார்கள். பின்னர் சைபர் கிரைம் போலீசார் பேசுவது போல போன் செய்து கேட்ட பணத்தை செலுத்த சொல்லி மிரட்டுவார்கள். இதனால் பாதிக்கப்பட்ட நபர்களும், குடும்பத்தினர்களும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்படுகிறார்கள்.

புகார் அளிக்கலாம்

முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தமோசடி செயலிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் அங்கீகரிக்கப்படாத செயலிகளை இணையத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கும் முயற்சிகள் சைபர் கிரைம் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் சிறிதும் தயங்காமல் காலம் தாழ்த்தாமல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீசில் நேரடியாக புகார் அளிக்கலாம். மேலும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்