"மக்காச்சோள பயிரில் படைப்புழுவை தடுக்க ஒரே மருந்தை தெளிக்காதீர்கள்"
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை தடுக்க ஒரே மருந்தை தொடர்ச்சியாக தெளிக்காதீர்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சித்தலூர், பானையங்கால், நாகலூர், அசகளத்தூர், எஸ்.ஒகையூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் 8500 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்.ஒகையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோள பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், அங்கிருந்த விவசாயிகளிடம், அதிக மகசூல் கிடைக்க களை பறித்து உரம் இட்டு மக்காச்சோள பயிரை முறையாக பராமரிக்க வேண்டும் என்றார். மேலும் ஒரு சில இடங்களில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது.
வெவ்வேறு மருந்துகளை தெளிக்க வேண்டும்
எனவே படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாத்துக்கொள்ள 10 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு குளோராண்ட்ரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 மில்லியும், ப்ளூபெண்டிமைட் 48 எஸ். சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லியும், 15 முதல் 20 நாட்களான பயிர்களுக்கு அசாடிராக்டின் 1500 பி.பி.எம். மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லியும், 40 முதல் 45 நாட்களான பயிர்களுக்கு எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 கிராம் அல்லது ஸ்பினிடிடோரம் 11.7 எஸ்.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மில்லியும் அல்லது நோவாலூரான் 10 இ.சி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லியும் கலந்து பயிரின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தெளிக்க வேண்டும்.
மேலும் ஒரே மருந்தினை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் பூச்சி மருந்து எதிர்ப்பு சக்தி படைப்புழுவிற்கு அதிகமாகிவிடும். இதனால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே வெவ்வேறு மருந்துகளை தெளித்து படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.