குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 திட்டத்தில் தவறான கற்பனை செய்ய வேண்டாம்ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 திட்டத்தில் தவறான கற்பனை செய்ய வேண்டாம் என்று ஈரோட்டில் அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

Update: 2023-03-26 22:14 GMT

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தவறான கற்பனை செய்ய வேண்டாம் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்குநகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

என்.எல்.சி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் மாதம் வரையும், கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு வரையும் என தொடர்ந்து ஒரு ஆண்டு பொதுமக்களுக்க நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளோம். தி.மு.க.வில் இணைவதற்காக ஏராளமானவர்கள் கடிதம் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் புதிதாக 50 ஆயிரம் பேரை கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது.

அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. தொடர்பாக தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுப்பார். எனவே தவறான நோக்கத்தில் இந்த விஷயத்தை கொண்டு செல்லக்கூடாது.

தவறான கற்பனை

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதில் தேர்தல் வாக்குறுதியில் என்ன கொடுக்கப்பட்டதோ அதேதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்த தொகை கொடுக்கும்பாது எந்த பிரச்சினையும் இருக்காது. இடைத்தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியில் எந்த நடவடிக்கையைும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டினார். அதனால் முதல்-அமைச்சர் தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் திட்டம் தொடர்பான தேதி மார்ச் மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

அதற்கு தேர்தல் சுற்றுப்பயணத்தில் எவ்வாறு அப்படி சொல்லலாம் என்று அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் என்ற வகையில் அவர் பதில் அளித்து இருப்பதாக தெரிவித்தார். அவர் சொன்னதை தற்போது செய்து இருக்கிறார். அரசு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரும்போது சில வார்த்தைகளை பயன்படுத்துவது நடைமுறையில் இருப்பதுதான். எனவே அந்த வார்த்தைகள் குறித்து தவறான கற்பனை செய்ய வேண்டாம். நடக்க வேண்டியது சரியாக நடக்கும்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

ஊழல் குறித்த அண்ணாமலை குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்று ஏற்கனவே விளக்கம் கூறி இருக்கிறோம். அவர்களது கட்சியிலேயே பிரச்சினை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்