சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார்.;
துப்பாக்கி சுடும் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடி படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கிய அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீசார், மத்திய காவல் அமைப்பினர் ஆண், பெண் உள்பட 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.
நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
ஆபத்தான செயல்களில்
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்குகிறார்.
சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம்.
வாகனங்களில் மீது ஏறுவது, ராட்சத கட்அவுட், பேனர்கள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தானது. படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இளைஞர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடும் போது அவர்களது குடும்பத்தினர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.