தேவையில்லாதவற்றை செல்போனில் பதிவிறக்கம் செய்யாதீர்கள்; டிராய் அமைப்பின் தென் பிராந்திய தலைவர் வேண்டுகோள்
தேவையில்லாதவற்றை செல்போனில் பதிவிறக்கம் செய்யாதீர்கள் என்று டிராய் அமைப்பின் தென் பிராந்திய தலைவர் முனிசேகர் வேண்டுகோள் விடுத்தார்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
இந்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தொலைத்தொடர்பு நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஆணையத்தின் தென்பிராந்திய தலைவர் முனிசேகர் தலைமையில் நடந்தது. அப்போது அவர் தொலைதொடர்புத்துறை சார்ந்த நுகர்வோர்களுக்கான கையேட்டை வெளியிட்டார்.
இதில் தென் பிராந்தியத்தின் தலைவர் முனிசேகர் பேசுகையில்:- ஆன்டிராய்ட் செல்போன்கள் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக அதை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக தேவையில்லாதவற்றை பதிவிறக்கம் செய்யக்கூடாது.
அவ்வாறு செய்யும்போது நம்மையும் அறியாமல் நம்மை பற்றிய தகவல்கள் பிறருக்கு எளிதாக சென்றுவிட வாய்ப்பு உள்ளது. கடன் தருவதாகவும், வேலைவாய்ப்புகள் தருவதாகவும் செல்போன்களில் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தொலைத்தொடர்பு நுகர்வோர்களை பாதுகாக்க டிராய் அமைப்பு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து கொண்டிருக்கிறது என்றதுடன் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கினார். தொலைத்தொடர்பு புகார்களை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து டிராய் அமைப்பின் இணை ஆலோசகர் கே.வி.சுரேஷ்பாபு பேசினார்.
அமைப்பின் மூத்த ஆராய்ச்சி அலுவலர் எம்.வெங்கடபதி வரவேற்று பேசினார்.
தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் துரைசிங்கம் பேசுகையில்:-
செல்போன் கோபுரங்கள் அமைப்பதாக மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொலை தொடர்பு சேவை வழங்குனர்களின் பிரதிநிதிகள், நுகர்வோர்கள், கல்லூரி மாணவர்கள் பலரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.