போகி பண்டிகையின்போது அதிக புகை வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் - சென்னை விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

Update: 2023-01-12 06:23 GMT

2018-ம் ஆண்டு போகிப் பண்டிகையின் போது விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததால் அதிகமாக புகை மூட்டம் ஏற்பட்டு அதிகாலை 3 மணி முதல் 9 மணி வரை 73 புறப்பாடு விமானங்களும், 45 வருகைக்கான விமானங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஆனால் அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக விமான நிலையத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் விமான போக்குவரத்து பாதிப்பு ஓரளவு குறைந்தது. விமான பயணிகள் எந்தவித சிரமங்கள் இன்றி தங்கள் விமானங்கள் புறப்பாடு மற்றும் விமான வருகை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்படும் வகையில் பொருட்களை எரிக்க வேண்டாம். தற்போது பனி மூட்டமான வானிலை இருப்பதால் போகி பண்டிகையின் போது தீ வைத்து கொளுத்துவதால் அதிக புகை ஏற்பட்டு விமான போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும். எனவே அதிக புகை வரும் பொருட்களை தீ வைத்து எரிக்காமல் தவிர்ப்பது விமான போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே அதிக அளவில் புகை வரும் பொருட்களை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்