"ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்"

பணம் மோசடி புகார்களே அதிகமாக வருவதாகவும், ஏலச்சீட்டு நடத்துபவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2023-06-20 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், நிருபர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வரக்கூடிய புகார்களில் பணம் மோசடி சம்பந்தப்பட்ட புகார்களே அதிகமாக வருகிறது. இதுபோன்ற மோசடி சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இதுதொடர்பாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தனியார் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாமல், தாங்கள் உழைக்கும் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை கொடுக்க வேண்டாம். வங்கி ஒருபோதும் உங்கள் ஓ.டி.பி.யை கேட்காது. உங்களுக்கு வரும் ஓ.டி.பி.யை யாரிடமும் பகிராதீர்கள். அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும். அதுபோல் தீபாவளி சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு நடத்துபவர்களையும் நம்பி பணத்தை பறிகொடுக்கிறார்கள். இதுபோன்று பணத்தை பறிகொடுக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்

குறிப்பாக சமூகவலைதளங்களில் வரும் வேலைவாய்ப்பு சம்பந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அதுபோல் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறும் நபர்களையும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்காணல் நடத்தப்பட்ட பின்னரே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை படித்த இளைஞர்களும், பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தினமும் சாராய வேட்டை

விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு மாவட்டத்தில் தினந்தோறும் சாராய வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். 6 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.

காவல்துறையினர், பொதுமக்களிடையே நேரடியாக சென்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்துக்கொண்டு தங்கள் பணத்தை பாதுகாத்து, பாதுகாப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்