வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்; உதவி ஆணையர் தகவல்
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆணையர் தெரிவித்தார்;
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமுக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பதிவு செய்துள்ள பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
இதில் வீட்டு வேலை செய்யும் செயலாளர்கள் வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதிஉதவி, கண்கண்ணாடி மற்றும் நியமனதாரர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை, 60 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வயதுக்கான சான்று ஆகியவற்றுடன் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.