காரைக்காலில் வீட்டு வேலை செய்த பெண் கழுத்தை நெரித்து கொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்
காரைக்காலில் வீட்டு வேலை செய்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.;
காரைக்கால்,
காரைக்கால், அக்கரைவட்டத்தைச்சேர்ந்தவர் கந்தகுமார். இவரது மனைவி வசந்தி(வயது42). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கந்தகுமாருக்கும், வசந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் கடந்த பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கந்தகுமார் 2 பெண் குழந்தைகளுடன் அக்கரைவட்டத்திலும், வசந்தி கடைசி குழந்தையுடன் நித்தீஸ்வரத்திலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வசந்திக்கும் அவரது உறவினர் சுந்தரமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. வசந்திக்கு, சுந்தரமூர்த்தி அடிக்கடி பணம் மற்றும் தங்க நகைகளை வழங்கியுள்ளார். இந்நிலையில், வசந்தி மேலும் சிலருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரமூர்த்தி, நேற்று பகல் மது அருந்திவிட்டு வசந்தி வேலை செய்யும் வீட்டிற்கு சென்று வசந்தியை கீழே தள்ளி, புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வசந்தியை வந்து பார்த்த போது வசந்தி மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். சந்தேகம் அடைந்த அக்கம்பகத்தினர் காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வசந்தியை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வசந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை யாரோ கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வசந்தி வேலை செய்த வீட்டுக்கு சுந்தரமூர்த்திதான் வந்துசென்றதாக அக்கம்பக்கத்தின கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் நேற்று இரவு காரைக்கால் களையன்கட்டி மதகு அருகே சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். வசந்தியை கொலை செய்ததாக சுந்தரமூர்த்தி வாக்குமூலம் அளித்ததால் போலீசார் அவரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.