பர்கூர் மலைகிராமத்தில் 13 குழந்தைகளின் தந்தைக்கு போராடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர்

பர்கூர் மலை கிராமத்தில் 13 குழந்தைகளின் தந்தைக்கு மருத்துவ குழுவினர் போராடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

Update: 2023-04-02 21:25 GMT

அந்தியூர்

பர்கூர் மலை கிராமத்தில் 13 குழந்தைகளின் தந்தைக்கு மருத்துவ குழுவினர் போராடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

13 குழந்தைகள் பெற்ற பெண்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த ஒரு விவசாய கூலி தொழிலாளிக்கு 4 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில்அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 13-வது குழந்தையாக சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 3 கிலோ எடை இருந்தது.

தப்பி ஓட்டம்

முதல் 2 குழந்தைகள் பிறந்தவுடன் தந்தையையும், தாயையும் மருத்துவ குழுவினர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் தொழிலாளியின் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ குழுவினர் பலமுறை அங்கு சென்று கணவன், மனைவி 2 பேரையும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் பயந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்துவிட்டனர்.

உறுதி அளித்தனர்

இந்தநிலையில் இறுதி முயற்சியாக நேற்று முன்தினம் அந்தியூர் வட்டார மருத்துவ குழுவினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் உதவியுடன் அவருடைய வீட்டுக்கு சென்றனர். இதற்கிடையில் 13 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு ரத்த சோகை இருந்ததால் அவருக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பதை டாக்டர்கள் அறிந்து கொண்டனர்.

இதனால் குழந்தைகளின் தந்தையை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் வழக்கம்போல் மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரிடம், 'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்துவிடும். 2, 3 நாட்கள் கழித்து வழக்கம்போல் உங்கள் வேலையை பார்க்கலாம். உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறோம்' என்று உறுதி அளித்தனர்.

குடும்ப கட்டுப்பாடு

இதைத்தொடர்ந்து அவர் ஒருவழியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் மதியம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் தொழிலாளிக்கு நவீன முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்