நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்

நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2023-08-29 18:45 GMT


நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறப்பு திட்டங்கள்

நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டம் 2023-யை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் சட்டம்-2023 சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் அன்றைய தினமே மசோதா நிறைவேற்றப்பட்டது. வணிகம், தொழில் சார்ந்த திட்டத்தை, 247 ஏக்கருக்கு குறையாத நீர்நிலைகள் உள்ள பகுதியில் செயல்படுத்த ஒருவர் விரும்பினால், அந்த திட்டத்திற்கு சிறப்பு அனுமதி கோரி, அரசிடம் விண்ணப்பிக்கலாம். அதில் இருக்கக்கூடிய நீர்நிலைகளையும் அந்த நிறுவனங்களே பயன்படுத்திக்கொள்ளலாம்.

திரும்ப பெறப்பட வேண்டும்

வேளாண்மையின் உயிா்நாடியாக உள்ள விளைநிலங்களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீா்நிலைகளை பாதுகாக்கவும் இந்த சட்டம் உதவாது. இதுவரை மக்கள் பயன்பாட்டில் உள்ள நீர் நிலைகள் கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கப்படும் புதிய அபாயத்தை இச்சட்டம் உருவாக்கியுள்ளது. காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தொழில் வளா்ச்சி என்ற பெயரில் நீா்நிலைகளை தாரை வாா்க்க இந்த சட்டம் பயன்படுத்தப்படும்.

மக்களின் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய பல மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் ஆளுனர் ஆர்.என்.ரவி, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான இந்த சட்டத்திற்கு மட்டும் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை ஒரு காலத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வேண்டுகிறோம். இச்சட்டம் தமிழக அரசால் திரும்ப பெறப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்