மழைக்காலங்களில் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்; பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்

மழைக்காலங்களில் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-09-28 18:45 GMT

இது தொடர்பாக கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பருவமழையால் மின்விபத்து

வடகிழக்கு பருவமழையின் போது மின் விபத்துகள் ஏற்படாத வகையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளது. அதன்படி அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், உடைந்த மின்கம்பங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சேதமடைந்து வெளியே தெரியும் புதைவட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்த உடன் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். மேலும் கடலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 9445856039 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். இது தவிர 9445855768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

புகார் மையம்

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 9498794987 என்ற செல்போன் எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு கணினி மயமாக்கப்பட்ட புகார் மையத்தில் பதிவு செய்தால் மின்தடை சரி செய்யப்படும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லவேண்டாம்.

பொதுமக்கள் வீடு கட்டும் போது மின்பாதைகள் இருந்தால், போதுமான இடைவெளி விட்டு வீடு கட்ட வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை போடக்கூடாது. மின்கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டவேண்டாம்.

எட்டாத உயரத்தில் விளக்குகள்

மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியல் அறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. இடி அல்லது மின்னலின் போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சுவிட்சுகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். அதேபோல் விளைநிலத்தில் மின்வேலி அமைக்கக்கூடாது. அதை மீறி மின்வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் குறித்து தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்