அதிகாரிகளை குறைசொல்ல வேண்டாம் ; மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் பிரியா வேண்டுகோள்

அதிகாரிகளுடன் சேர்ந்து தான் நாம் வேலை செய்கிறோம். அதிகாரிகளை குறைசொல்ல வேண்டாம் என்று மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா கவுன்சிலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2023-03-28 22:10 GMT

பட்ஜெட் விவாதம்

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் கடந்த 27-ந்தேதி ரிப்பன் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா இந்த நிதியாண்டுக்கான 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். கல்வி, சுகாதாரம், மழைநீர் வடிகால் பணிகள், பூங்கா பராமரிப்பு, மக்களை தேடி மேயர், சாலைகளை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதேபோல, 2022-23-ம் நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை ரூ.334 கோடி அளவில் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கியது. பின்னர், உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் ஆர்.பிரியா பதிலளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-

பெயர் பலகை

நகரமைப்புக் குழு தலைவர் இளைய அருணா:- கலைஞர் நூற்றாண்டை பெருமைப்படுத்தும் விதமாக கவுன்சிலர்களின் நிதியை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும். அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் பலர் 'மவுண்ட் ரோடு' என்று கடைகளின் பெயர் பலகைகளில் எழுதுகிறார்கள். அவர்களை எச்சரித்து பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

நிலைக்குழு தலைவர் (கல்வி) விஸ்வநாதன் :- தமிழ்நாடு பட்ஜெட்டில் எப்படி சுகாதாரம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதுபோல சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.70 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் உள்ள பூங்காக்களையும், நீச்சல் குளங்களையும் ஒரே ஒப்பந்ததாரர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனால், மாநகராட்சிக்கு ரூ.3 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரியை கண்டுபிடித்து அவர் மூலமாகவே இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

குறைசொல்ல வேண்டாம்

துணை மேயர் மகேஷ்குமார்:- எழுத்துப்பூர்வமாக ஆணையரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விஸ்வநாதன்:- ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக மேயரிடமும், ஆணையரிடமும் புகார் தந்துள்ளேன். மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பை நீங்கள் வசூலிக்க வேண்டும். வரக்கூடிய காலங்களில் யாராக இருந்தாலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒன்று அல்லது 2 பூங்காக்களை மட்டுமே ஒப்பந்தம் கொடுக்க வேண்டும். சென்னையில் உள்ள குடிநீர் அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தபோது அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் இல்லை. அனைத்து அலுவலகத்திலும் படம் அமைக்க வேண்டும்.

மேயர் ஆர்.பிரியா:- சென்னை மாநகராட்சி என்பது அதிகாரிகள், கவுன்சிலர்கள் என இருவரும் கலந்து வேலை செய்வது தான். அதிகாரிகள் குறித்து கவுன்சிலர்கள் ஏதாவது புகார்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் என்னிடமோ அல்லது கமிஷனரிடமோ தனியாக தெரிவிக்கலாம். கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் சேர்ந்து தான் நாம் வேலை செய்கிறோம். அதிகாரிகளை குறைசொல்ல வேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்