பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? - எண்ணெய் நிறுவன அதிகாரிகள், வாகன ஓட்டிகள் கருத்து

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? என்பது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள், வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-05-26 18:45 GMT

கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்தப் பெட்ரோல் பங்கில்தால் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா? பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா? இதுபோன்ற சந்தேகங்களுக்கு எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

கலப்படம்

பாளையங்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கமுகேஷ்:- நெல்லை மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் அளவு குறைவு இல்லை. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மீட்டரை பார்ப்பதற்கு முன்பாகவே பெட்ரோல், டீசல் போட்டு விடுகிறார்கள். இதனால் பெட்ரோல், டீசல் அளவு குறைகிறது. இதுகுறித்து கேட்டால் தகராறு ஏற்படுகிறது. சிலர் இதை பார்க்காமல் அப்படியே சென்று விடுகிறார்கள். ஆட்டோ, கார்களின் டிரைவர்கள் பெட்ரோல், டீசல் அளவை சரிபார்த்த பின்பு தான் அங்கிருந்து செல்கிறார்கள். அளவு குறைவாக போட்டால் அவரிடம் தகராறு செய்து விடுவார்கள். இதனால் நெல்லையில் உள்ள பெரும்பாலான பங்குகளில் அளவு சரியாக போடுகிறார்கள். சில பகுதியில் உள்ள பங்குகளில் மட்டும் அளவு குறைவாக உள்ளதாக புகார்கள் கூறப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள பங்குகளில் பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற பங்குகளை கண்டறிந்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலை:- நெல்லையில் பெரும்பாலான பெட்ரோல் பங்கில் கொடுக்கின்ற பணத்திற்கு நியாயமான அளவு பெட்ரோல் போடுகிறார்கள். சிலர் ஏமாற்றுகிறார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பெட்ரோலும், ஆயிலும் சேர்த்து போடுகின்ற வாகனங்களுக்கு அவைகளை போடும்போது குறைவாக போட்டு விடுகிறார்கள். இதுகுறித்து கேட்டால் ஆயில் விலை அதிகம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு ஏமாற்றுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் தற்போது பெட்ரோல், டீசல் விலை அளவுக்கு அதிகமாக உள்ளதால், அதற்கு பணம் செலவழிக்கவே கஷ்டமாக உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, பெட்ரோல், டீசல் அளவை குறைவாக போட்டு ஏமாற்றுபவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வு  செய்ய வேண்டும்

நெல்லையை சேர்ந்த மீனா:- நெல்லையில் சில பங்குகளில் பெட்ரோல் அளவு குறைவாக தான் போடுகிறார்கள். ஜீரோவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். பெட்ரோல் போட தொடங்கியதுமே அதற்குள் 15 பாயிண்ட் அல்லது 20 பாயிண்ட் சென்று விடுகிறது. ஆயில் சேர்த்து போடும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதிக பணம் வசூலிப்பதற்காக பவர் பெட்ரோல் என்று போடுகிறார்கள். இரவு நேரங்களில் பெரும்பாலும் இந்த பெட்ரோல் தான் போடுகிறார்கள். சாதாரண பெட்ரோல் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் எப்படியாவது பெட்ரோல் போட வேண்டும் என்ற நிலை வந்து விடுவதால், அதனை போட்டுக் கொள்கிறார்கள்.

சில பெட்ரோல் பங்குகளில் கலப்படம் உள்ளது. அதை போட்டு சிறிது தூரம் செல்வதற்குள் புகை அதிகமாக வந்து விடுகிறது. இதுகுறித்து கேட்டால் உங்கள் வாகனம் சரியில்லை என்று கூறி விடுகிறார்கள். எனவே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடிக்கடி பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்தி அளவு சரியாக இருக்கிறதா? தரம் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.

ஜீரோவை கவனிப்பது இல்லை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஜவஹர்:- நாம் இருசக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ எதுவாக இருந்தாலும் லிட்டர் கணக்கில் பெட்ரோல், டீசல் போட வேண்டும். ரூ.100, ரூ.500, ரூ.1,000 என்று ரூபாய் கணக்கில் போட்டால் கண்டிப்பாக பெட்ரோல் அல்லது டீசல் அளவு குறையும். 5 லிட்டர், 10 லிட்டர் என்று லிட்டர் கணக்கில் போடும்போது அளவு குறைவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் சிலர் கார்களில் வந்து எரிபொருள் நிரப்பும்போது செல்போனில் பேசிக்கொண்டு, பெட்ரோல் பங்கில் உள்ள எந்திரத்தில் ஜீரோ இருக்கிறதா? என்பதை கவனிப்பது இல்லை. அவ்வாறு கவனிக்காவிட்டால் ஏற்கனவே வேறு ஒருவருக்கு எரிபொருள் நிரப்பிய கணக்குடன் தற்போது நிரப்பப்படும் கணக்கும் சேர்ந்து விடும். இதில் தவறு நிறைய நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போது கண்டிப்பாக ஜீரோவை கவனிக்க வேண்டும்.

செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையைச் சேர்ந்த செந்தில்:- பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் அளவு சரியாக இருக்கிறது. சில பங்குகளில் எனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும்போது கிலோமீட்டர் கிடைப்பது இல்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சில பெட்ரோல் பங்குகளில் அளவு குறைவாக இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. எனவே, அரசும் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எந்திரம் தவறு செய்யாது

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது, 'அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம். அதேபோல் கொடுக்கிற பணத்திற்கு சரியான அளவில் எரிபொருள் போடப்படுகிறதா? என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல் நாசில் வழியாக எரிபொருள் போடும் போது தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும்.

அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதைத் சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

எண்ணெய் நிறுவனம் மறுப்பு

இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, 'எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தரமாகவும், அளவு எப்போதும் சரியான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இதற்காக அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு, அவை அனைத்தும் இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொகையை பதிவு செய்துவிட்டு அதைவிட குறைவான அளவு எரிபொருள் வழங்கினால் எந்திரம் இணைப்பு துண்டிப்பாகி, அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரி செய்ய முடியும் என்பதால் தவறுக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் சைபர் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும்.

எரிபொருள் நிரப்பப்பட்ட உடன் நாம் வழங்கிய தொகைக்கு எரிபொருள் வழங்கியதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அவ்வப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்