பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா?

கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்தப் பெட்ரோல் பங்கில்தால் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா?

Update: 2023-05-26 17:54 GMT

கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்தப் பெட்ரோல் பங்கில்தால் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா?

பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இதுபோன்ற சந்தேகங்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

தரமான பெட்ரோல் கிடைப்பதற்கு...

இலையூரை சேர்ந்த நேரு:- நான் கடந்த 18 ஆண்டுகளாக டிரைவராக உள்ளேன். நிறைய பெட்ரோல் பங்குகளில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பி உள்ளேன். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் கம்பெனியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவது வழக்கம். இதில் மைலேஜ் மற்றும் என்ஜின் ஆகியவற்றிற்கு சிறப்பாக அமைவது, அதிக புகை வெளியிடாதது, வாகனங்கள் இயக்குவதற்கு சிறப்பாக எந்த பெட்ரோல் பங்க் உள்ளதோ அந்த பங்குகளிலேயே எங்கு சென்றாலும் பெட்ரோல் நிரப்புகிறேன். என்னை பொருத்தவரையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வாகனங்களுக்கு நன்றாக உள்ளது.

விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த அழகர்:- தற்போது ஒரு சில பெட்ரோல் பங்குகளில் வழங்கப்படும் பெட்ரோல்களில் அளவுகளை விட தரம் தான் வேறுபடுகிறது. இதனை நாம் அந்தந்த பெட்ரோல் பங்குகளில் இருந்து மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நிரப்பிக்கொண்டு செல்லும்போது அறிய முடிகிறது. நாம் செல்லும் தூரம் (கிலோமீட்டரில்) மாறுதல் ஏற்படுகிறது. இதை வைத்து தான் நாம் அளவீடு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் பெட்ரோல் பங்குகளில் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்படும் ஆயிலின் தரம் மற்றும் அளவும் வேறுபடுகிறது. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் தரமான ஆயில் மற்றும் அளவு சரியாக கிடைக்கிறது. ஒரு சில பெட்ரோல் பங்குகளில் அப்படியில்லை. எனவே இதனை அரசு கருத்தில் கொண்டு அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் அரசு அதிகாரிகளை கொண்டு அடிக்கடி ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தரமான பெட்ரோல் கிடைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

கடுமையான உழைப்பின் பலனாக கிடைக்கும்

ஸ்ரீபுரந்தானை சேர்ந்த வடிவேல்:- பரவலாக பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது குறிப்பிட்ட அளவில் இருப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் குறை சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையா? என்பது ஆதாரப்பூர்வமாக இதுவரை தெரியவில்லை. வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளின் மீது உள்ள நம்பிக்கையின் பெயரில் தான் எரிபொருள் நிரப்பி கொள்கிறார்கள். நடுத்தட்டு மற்றும் ஏழை மக்கள் அதிக அளவு இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். வியாபாரிகள், தொழிலாளிகள், விவசாயிகள், இருசக்கர வாகனங்கள், லோடு ஆட்டோக்கள், டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தொழில் செய்கிறார்கள். அவர்களின் கடுமையான உழைப்பின் பலனாக கிடைக்கும் பணத்தை செலவு செய்துதான் எரிபொருள் நிரப்புகிறார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நிச்சயம் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.

பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் திருச்சி மண்டல தலைவருமான ஜி.என்.சுதாகர்:- பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா?. இந்த கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. இதற்கான விளக்கத்தை சொல்ல வேண்டியது எங்களது கடமை. இப்போது அரசு துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நடத்தும் பெட்ரோல் பங்குகளில் ஆட்டோமேஷன் என்ற கணினி சம்பந்தப்பட்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயில் கம்பெனிகள் நேரடியாக விலை, தரம் மற்றும் அளவு ஆகியவற்றை தங்களது தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் அளவுக்கு இப்போது மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் 5 லிட்டர் குவளை மூலம் அளவு சரியாக இருக்கிறதா? என்பதை சோதிக்க முடியும். எடையளவு மற்றும் முத்திரை அதிகாரி ஒவ்வொரு வருடமும் ஸ்டாம்பிங் என்ற பெயரில் சரி பார்க்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் சோதித்துப்பார்க்கலாம்

மேலும் இடையிடையே இந்த அளவுகளை சரியாக இருக்கிறதா? என்றும் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் அவ்வப்போது அளவு மற்றும் தரத்தை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைப்படி 5 லிட்டர் அளவுள்ள பெட்ரோல் அல்லது டீசல் வாங்கும்போது பிளஸ் அல்லது மைனஸ் (+/-) 25 எம்.எல். வரை இருக்கலாம் என்று வரையறுத்து இருக்கிறார்கள். இந்த டாலரன்ஸ் என்பது வோல்டேஜ் மற்றும் மெக்கானிக்கல் வேரியேஷன் மூலம் வரலாம் என்பது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது எங்களது பெட்ரோல் பங்குகளில் வித்தியாசம் (+/-) 10 எம்.எல். விட குறைவாகவே இருக்கும். இதை எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் சோதித்துப் பார்க்கலாம். அளவு மற்றும் தரத்தில் சிறிய வித்தியாசம் இருந்தாலும் ஆயில் கம்பெனி உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் கார் 40 லிட்டர் கொள்ளளவு என்று மேனுவல் புக்கில் உள்ளது ஆனால் உண்மையாக சோதித்துப் பார்க்கும்போது 50 முதல் 52 லிட்டர் வரை கொள்ளளவு உள்ளது. இதை சரியாக சோதித்து பார்க்காமல் பெட்ரோல் பங்க் அளவில் குறை உள்ளது என்று சில வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிர தரத்தை பரிசோதிக்க ஹைட்ரோ மீட்டர் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ளது. இதன் மூலம் தரத்தை யார் வேண்டுமானாலும் பரிசோதித்துக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் சேவை குறைபாடு இருந்தால் பெட்ரோல் பங்குகளில் புகார் பதிவு உள்ளது. அதில் பதிவு செய்யலாம் அல்லது எண்ணெய் நிறுவன அதிகாரியின் மொபைல் நம்பர் பெட்ரோல் பங்குகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் நேரடியாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

வேதியல் பொருள்களை கலந்தும் விற்பனை

உடையார்பாளையத்தை சேர்ந்த க.ஜெகநாதன்:- இன்றைய அவசரகாலகட்டத்தில் தினசரி தேவைகளில் நமது வாழ்க்கையோடு ஒன்றி பிரிக்க முடியாத அளவிற்கு அவசியமானது வாகனம். முதலில் சைக்கிள் காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால் இருசக்கர வாகனங்கள் முதல் பல சக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து வலம் வருகின்றன. மனிதன் உயிர்வாழ தேவையான ஆக்சிஜன் போல வாகனங்களை இயக்க எரிபொருள், டீசல், பெட்ரோல் தேவை. இந்த டீசல், பெட்ரோல் எல்லா பங்குகளிலும் அளவு, தரம் விலை சரியாக இருப்பது இல்லை. ஒரு பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 60 கிலோ மீட்டர் வரை செல்லலாம். மற்றொரு பங்கில் போட்டோம் என்றால் நிச்சயம் மாறுபாடு தெரிகிறது.

எல்லா பெட்ரோல் பங்குகளிலும் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் சதவீத அடிப்படையில் அளவு குறையும்படி டெக்னிக்கல் உள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக பம்ப் செய்து மீட்டரில் 100 வந்தவுடன் நிறுத்திவிடுகிறார்கள். இதில் பம்புக்கும், வாகனத்திற்கும் இடைப்பட்ட தூரத்தில் இருக்கும் பெட்ரோல் நம் வண்டியில் முழுமையாக போடுவது கிடையாது. ஒரு சில கம்பெனிகள் கலக்கும் வேதியல் பொருள்களை லாப நோக்கில் கலந்தும் விற்பனை செய்கிறார்கள். நாம் யாரையாவது நம்பி பெட்ரோல், டீசல் போட சொன்னால் இடையில் கையாடல், தொகை குறைவாக தந்தும் பெட்ரோல் போடுகிறார்கள். சில பங்குகளில் அளவு குறைவாக போட்டு அதிக தொகைக்கு பில்லும் தருகிறார்கள். எனவே தவறு ஒருவரை மட்டும் சொல்லி பயனில்லை.

எந்திரம் தவறு செய்யாது

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது, 'அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம். அதேபோல் கொடுக்கிற பணத்திற்கு சரியான அளவில் எரிபொருள் போடப்படுகிறதா? என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல் நாசில் வழியாக எரிபொருள் போடும் போது தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும். அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதைத் சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

எண்ணெய் நிறுவனம் மறுப்பு

இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, 'எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தரமாகவும், அளவு எப்போதும் சரியான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இதற்காக அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு, அவை அனைத்தும் இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொகையை பதிவு செய்துவிட்டு அதைவிட குறைவான அளவு எரிபொருள் வழங்கினால் எந்திரம் இணைப்பு துண்டிப்பாகி, அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரி செய்ய முடியும் என்பதால் தவறுக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் சைபர் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட உடன் நாம் வழங்கிய தொகைக்கு எரிபொருள் வழங்கியதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அவ்வப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தவறு செய்யபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்